2118. பின்னுமோர் நால்வர் தெவ்வர்
     முறைமுறை பிணங்கி வீழ்ந்தார்
அன்னவர் தம்மு ளானே
     குறைப்பிண மொருவ னாகித்
தன்னைமெய் பதைப்ப நோக்கி
     யவனையுந் 3தபுப்ப நோனார்
துன்னிய துயிலு மேனைத்
     துளக்கஞ்செய் திருவர் பட்டார்.
    (இ - ள்.) பின்னும் ஓர் நால்வர் தெவ்வர் - மீண்டும் ஒரு நான்கு பகைவர்கள், முறை
முறை பிணங்கி வீழ்ந்தார் - ஒருவர் பின் ஒருவராய்த் தன்னோடு மாறாகிப் போர்செய்து
மாண்டனர், அன்னவர் தம்முளானே - அந்நால்வருள் ஒருவனே, குறைப்பிணம் ஒருவனாகி
- உயிர் முழுதும் ஒழியாத ஒரு குறைப்பிணமாய்க் கிடந்து, தன்னை மெய்பதைப்ப -
தன்னை உடல் சினத்தாற் றுடிக்கும்படி, நோக்கி - நோக்க, அவனையும் - அம்
மறவனையும், தபுப்ப - கொன்றொழிக்க, நோனார் - பகைவராகிய, துன்னிய துயிலும் -
நெருங்கிய நித்திரையும், ஏனை - மற்றைப் பிரசலையும் ஆகிய, இருவர் - இருவரும்,
துளக்கம் செய்து - தன்னைக் கலங்கப் போர்செய்து, பட்டார் - முடிவில் இறந்தொழிந்தார்,
(எ - று.)

     ஒரு நால்வர் - மெல்லிய கஷாயம் என்னும் சஞ்சுவலனகுரோதம் மானம் மாயம்
லோபம் என்பன. இருவர்:- நித்திரை பிரசலை என்பன.

     அன்னவர் தம்முளானே குறைப் பிணம் ஒருவன் என்றது சஞ்சுவலன லோப
கஷாயகர்மத்தை, இஃது ஒன்றை மட்டும் “மகா சூக்ஷநிமமாய், பிரக்ஷாளனம் பண்ணின
வஸ்திரத்தில் தோய்ந்த குசும்பம்போல சூக்ஷ்மமாக வர்த்தித்து ஏனைய மோகனீய
மனைத்தையும் விடவேண்டுமாகலின், அங்ஙனம் கூறினார் என்க.
 

( 50 )