(இ - ள்.) ஆங்கு அவரழிந்த பின்னை - அவ்வாறு அப்பகைவர்கள் பட்டொழிந்த பின்னர், அரசர் ஐயிருவரோடும் தாங்கியீர் இருவர் தாக்கி - சுவை முதலிய ஐந்து மன்னரும், வெண்மை முதலிய ஐந்து மன்னரும் ஆகிய பதின்மருடன், சேர்ந்து, ஞானாவரணீயம் முதலிய நான்கு பகைவர்களும், தன்னோடு போர்செய்து,தலைதுணிப்புண்ட பின்னை - தலையறு பட்டிறந்து ஒழிந்த பின்னர், வீங்கிய - பெருகிய, அனந்த ஞான்மை விழுநிதி முழுதும் கைக்கொண்டு - கடையிலா நான்குவகைப்பட அநந்த சதுஷ்டயமாகிய சிறந்த பொருள் முழுதும் தனதேயாய்க் கைக்கொண்டு, ஓங்கிய வுலகிற்கு எல்லாம் - உயர்ந்த வீட்டுலகம் முழுமைக்கும், ஒரு பெருங்கிழவன் ஆனான் - ஒப்பற்ற பெரிய உரிமையாளனாய்த் திகழ்ந்தான் பயாபதிமுனிவன், (எ - று.) அரசர் ஈரைவர், சுவை ஒளி ஊறு ஓசை நாற்றமும், வெண்மை பொன்மை பசுமை செம்மை கருமை ஆகிய பத்துமாம். நால்வர் - ஞானாவரணீயம், அந்தராயம் தரிசனாவரணீயம் மோகனீயம், என்பன. ஞான்மை - நான்மை : ஞகரம் நகரப்போலி அனந்தஞான்மை விழுநிதி என்றது - கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா இன்பம், கடையிலா வீரியம், என்னும் நான்கினையும் என்க. |