(இ - ள்.) தாங்கருஞ் சுடர்ஒளி - பொறுத்தற்கரிய மிக்க ஒளியையும், தீங்கரும்பு அனையசொல் சிறுமி - இனிமை மிக்க கருப்பஞ்சாற்றை யொத்த மொழிகளையுமுடைய சுயம்பிரபை, சக்கரவாளம் என்று ஓங்கு இரும்பெயர் கொள் நோன்பு - சக்கரவாளமென்று சிறப்பித்துச் சொல்லப் பெறுகிற பெரிய பெயரைக்கொண்ட நோன்பை, உயரநோற்றபின் - சிறப்பாகச் செய்து முடித்த பிறகு, தெய்வதக்கு - தெய்வமாகிய அருகக் கடவுளுக்கு, ஒரு - ஒப்பற்ற, பெருஞ்சிறப்பு அயர்தல்மேயினாள் - பெரிய திருவிழாச் செய்யலானாள். ஆங்கு - அசைநிலை, (எ - று.) சுயம்பிரபை சக்கரவாளம் என்னும் பெயருடைய நோன்பினைச் செய்து முடித்த பிறகு அருகக்கடவுளுக்குத் திருவிழாச் செய்யலானாள் என்க. 'தாங்கருஞ் சுடரொளியை'யைச் சுயம்பிரபைக்கு உண்டாக்கியதெனத், 'தாங்கருஞ் சுடரொளியை' சக்கரவாளத்திற்கு டைமொழியாக்கினுமாம். ஓங்குதல் - உயர்தல். தெய்வதக்கு - தெய்வதத்துக்கு; அத்துச்சாரியை தொக்கது. 'ஆங்கொடு' என்னும் பாடத்திற்கு ஒடுவை இசைநிறையாகக் கொள்க. “ஓடுவுந் தெய்யவும் இசை நிறை மொழியே“ என்பது நன்னூல். “அந்திலாங் கசைநிலை யிடப் பொருளவ்வே“ என்பதனால் ஆங்கு அசைநிலையாதல் காண்க. அப்பொழுது எனப் பொருளுரைப்பினுமாம். |
(இ - ள்.) பங்குனித் திங்களின் உத்தர நாளிற்கு முந்தின நாளில் ஜிநாலயத்திற்குச் சென்று, கடவுளையும் ஆகமத்தையும் வணங்கி, ஆசாரியரைப் போற்றி வேண்டி நோன்பு பெறுதல் வேண்டும். உத்தரநாளில், உண்பன, தின்பன, பருகுவன, நக்குவனவாகிய எல்லாவகையான உணவுகளையும் நீக்கி நோன்பிருத்தல் வேண்டும். அந்தத் திங்களில் இந்த நோன்பிற்குப் பஞ்சகல்யாணம் என்று பெயர். இந்த ஒருநாள் நோன்பைக் கடைப் பிடித்தலால் எண்ணாயிரம் நோன்பின் பயனுண்டாகும் இப்படியே சித்திரை முதலிய திங்கள்தோறும் நோன்பிருந்தல் வேண்டும். |
மாதம் | நட்சத்திரம் | பெயர் | பலன | சித்திரை வைகாசி ஆனி ஆடி ஆவணி புரட்டாதி ஐப்பசி கார்த்திகை மார்கழி தை மாசி | சித்திரை விசாகம் கேட்டை பூராடம் திருவோணம் பூரட்டாதி அசுவினி கிருத்திகை மிருகசீரிடம் புஷ்ய மகம் | அட்டமகாப்ராதி ஹார்ய விபூதி ஜிநதர்சனம் சதுர்விம்சதி தீர்த்தகரர் தர்ம ஸந்ததி வர்த்தநம் நந்த்யா வர்த்தம் ஆர்யா வர்த்தம் சதுர் விம்சதி ஸ்தவநம் அலங்காரம் புத்ரவர்த்தநம் பஞ்சாலங்காரம் தநவர்த்தநம் | 1000 1200 1400 1600 1800 40,000 60,000 78,000 108,000 36,02,000 60,00,000 | மேற்குறித்த நட்சத்திரங்கள் அந்தந்த மாதத்திற் பௌர்ணமி திதியோடு கூடியிருத்தல் பெரும்பான்மை. பங்குனி மாதம் முதல் மூன்று ஆண்டும் மூன்று திங்களும் இடை விடாமல் நோற்கவேண்டும். இவ்வாறு திங்களெல்லாம்கூட முப்பத்தொன்பது நோன்பாகும். இப்படி நோற்கையில், உலககுருவான அருகக்கடவுளுக்கு நூற்றெட்டுக் கலசங்களினால் விதிமுறைப்படி திருமுழுக்காட்டிப் பேரமுது படைத்துப் பார்ச்வ பட்டாரகர்க்குப் பூசைசெய்து கௌதம கணதரருடைய நாமோத்தேசஞ் செய்து அர்ச்சனை பண்ணவேண்டும். நோற்பித்த ஆசார்யரை அருச்சித்து உணவு முதலியன கொடுக்கவேண்டும். ஆகமத்திற்கு வழிபாடு செய்ய வேண்டும். இருடிகட்கும் ஆர்யாங்கனைகட்கும் பிரமசாரிகட்கும் ஆடை கொடுக்க வேண்டும். மற்றவர்கட்கு இயன்ற அளவு தான தருமங்கள் செய்ய வேண்டும். நோன்புநாளில் தேவபூசை பண்ண வேண்டும். அடுத்த நாளில் தேவபூசை, புத்தக பூசை புராணிக பூசை, ஜாவக பூசை, கதா சிரவணம், குருபூசை, தானம் முதலியன செய்தபின்பு உணவுகொள்ள வேண்டும். இவ்வாறு நோற்று முடித்தவர் இப்பிறப்பு மறுபிறப்புக்களில் வேண்டிய இன்பங்களைப் பெற்றுத் துறக்க வீடுகள் சேர்வர். இந்த நோன்புகளுள் ஏதாவது ஒரு நோன்பு தவறினால் ஆசாரிய ரிடத்தில் கழுவாய் செய்துகொள்ள வேண்டும், பெண்களானால், தாய் தந்தை கணவன் அண்ணன் தம்பி இவர்களில் ஒருவரிடம் கழுவாய் செய்துகொள்ள வேண்டும். ஆதியில் இந்த நோன்பு ஸ்ரீவர்த்தமானஸ்வாமிகள் சமவசரணத்தில் கௌதம கணதரரால், ஒத்தாயண மகாராசனது மனையாளான இந்திராணி என்பவளுக்கு இயம்பியருளப்பெற்றது. இல்லறத்தார்கள் தீவினையைப் போக்கிக்கொள்ளுதற்கு இது தக்க வழியாகும். துறக்க வீடுகட்குக் காரணமாம். இதனை நோற்று விரும்பியவற்றைப் பெற்றவர்கள், இந்திராணி, ஸ்வயம்பிரபை, குந்தி, சீதாதேவி, சீமதி முதலிய பலர் என்ப. விவரம் விரிந்த சைந நூல்களில் கண்டுகொள்க. |