இதுவுமது

2122. பொன்னரி மாலை பூவின் பொழிமதுப் பிணையன் முத்தின்
1மின்னிவர் விளங்குந் தாம மெனவிவை விரவி வீசித்
துன்னிய வினைவர் கூட்டந் துணித்துவீற் றிருந்த கோனைப்
பன்னிய துதிய ராகி யமரர்கள் பரவு கின்றார்.
 
     (இ - ள்.) பொன்னரி மாலை - பொன்னாலியன்ற அரிமாலையென்னும் அணியும்,
பூவின் பொழிமதுப் பிணையல் - பூவானியன்ற தேன்துளிக்கும் மாலையும், முத்தின் மின்
இவர் விளங்கும் தாமம் - முத்தானியன்ற ஒளி தவழ்ந்து திகழும் மாலையும், என இவை
விரவி வீசி - என்னும் இம்மாலைகளை விசும்பிற் கலக்க வீசினராய், துன்னிய வினைவர்
கூட்டம் - நெருங்கிய வினைப் பகைவரையும் அவர்க்கினமாய கூட்டத்தாரையும், துணித்து -
கொன்றழித்து, வீற்றிருந்த கோனை - வாகை சூடி வீற்றிருந்த துறவியர் வேந்தனாகிய
பயாபதியை, அமரர்கள் - தேவர்கள், பன்னிய துதியராகி - பலபடப் பாராட்டிய
வாழ்த்துடையராய், பரவுகின்றார் - புகழ்வாராயினர், (எ - று.)

     நல்வினையாதல், தீவினையாதல் செய்தற்குக் காரணம் அவாவே ஆகும்.
அவ்வவாவுடையார்க்குச் சினம் முதலிய எல்லாக் குற்றங்களும் உளவாம். ஆதலின்
இவ்வழுக்குகளை வினைவர் கூட்டம் என்று கூறினர் என்க.
 

( 54 )