தேவர்கள் பயாபதி முனிவனைப் புகழ்ந்து பாடுதல்
வேறு
2123. கருமால் வினையரசு காறளர நூறிப்
பெருமான் முடிவென்னும் பெண்ணரசி தன்னை
ஒருவாமை வேட்டெய்தி யூழி பெயர்ந்தாலும்
வருமா றிலாத வளநகரம் புக்கானே.
 

     (இ - ள்.) கருமால் வினை அரசு கால்தளர நூறி - இருண்ட மயக்கத்தைப் பற்றி
வருகின்ற இருவினை யென்னும் (உயிர் வெளியை இதுகாறும் ஆட்சிசெய்த) அரசர்கள்,
நிலை தளர்ந்து மாளும்படி துகள்செய்து, பெருமான் - பயாபதி என்னும் பெரியோன்,
முடிவென்னும் - கேவல ஞானம் என்னும் பெயரையுடைய, பெண்ணரசி தன்னை - மகளிர்
அரசியை, ஒருவாமை - பின்னர் ஒரு பொழுதும் அகலாதவாறு, வேட்டு எய்தி - விரும்பி
மணந்து, ஊழி பெயர்ந்தாலும் - ஊழி பலப் பல கழிந்தாலும், வருமாறு இலாத - மீண்டும்
பிறவிகளிலே வருதலில்லாத, வளநகரம் - அழிவில் பேரின்ப வளமிக்க வீடு என்னும்
நகரத்தின் கண்ணே, புக்கான் - புகுந்தான், ஏ : அசை, (எ - று.)

மெய்யுணர்ச்சி யுடையோர் “பேர்த்துள்ள வேண்டா பிறப்பு“ என்பவாகலின், “கருமால்
வினையரசு கால் தளர நூறி“ என்றார்.
 

( 55 )