2124. சிந்தை மடவா 1டொடுத்த தியானவாள்
வெந்து வினைவேந்தர் 2வீடியபின் விட்டெறிந்து
முந்து முடிவென்னுங் கன்னி முலைமுயங்கி
வந்து பெயரா வளநகரம் புக்கானே.
 
     (இ - ள்.) சிந்தை மடவாள் தொடுத்த தியான வாள் - சிந்தை யென்னும் மகள்
போர்தொடுத்தற்கு ஏந்திய தியானம் என்னும் வாளினை,வினைவேந்தர் வெந்து வீடியபின் -
இரு வினைப் பகைமன்னர்கள் உளம் வெம்பி இறந்து தொலைந்த பின்னர், விட்டெறிந்து -
வீசி யெறிந்து விட்டனளாக, முந்தும் முடிவு என்னும் - அந்நிலையிலே முந்தித்
தோன்றுகின்ற கேவல ஞானம் என்னும், கன்னி முலைமயங்கி - அழிவற்ற மடந்தையின்
முலைப்போகத்தே திளைத்து, வந்து பெயரா - தன்பால் வந்தோர் மீண்டுபோகா
வியல்பிற்றாகிய, வள நகரம் புக்கானே - அறிவிலின்பவளமிக்க வீடாகிய நகரத்தின்
கண்ணே புகுந்தான், (எ - று.)

     மனம் தெளிந்து நிலைபெறும் வரையிலேதான் தியானம் முதலிய பயிற்சிகள்
வேண்டப்படும், மனம் நன்கு தெளிந்த பின்னர், தவச் செயல்களாகிய தியானம் முதலியன
தாமே நழுவிப் போதலின் “தியான வாள் விட்டெறிந்து முடிவென்னும் கன்னிமுலை முயங்கி“
என்றார்.

     சிந்தை மடவாள் தியான வாள் விட்டெறிய முடிவென்னும் கன்னி முலைமயங்கி
வளநகரம் புக்கான் என்று முடித்துக்கொள்க. விட்டெறிந்து என்பதனை, விட்டெறிய எனச்
செயவெனெச்சமாக்குக.
 

( 56 )