2125. அலகில் பெருங்குணத்தோ னாவரண நீக்கி
உலக மலோக முடனே விழுங்கிப்
புலவன் முடிவென்னும் பூங்கொடியுந் தானும்
நிலவு சிவகதியு ணீங்காது நின்றான்.
 
     (இ - ள்.) அலகில் பெருங்குணத்தோன் - அளவிறந்த பெரிய குணம் உடைய
பயாபதி, ஆவரணம் நீக்கி -மதிஞானா வரணீயம் முதலிய மறைப்புகளை ஒருங்கே அகற்றி,
உலோகம் அலோகம் உடனே விழுங்கி - உலோகமும் அலோகமும் ஆகிய ஐந்து
அத்திகாயங்களையும் தனது மெய்யுணர்வானே விழுங்கி, புலவன் - நன்ஞானம் உடைய
பயாபதி, முடிவென்னும் - கேவலஞானம் என்னும், பூங்கொடியும் தானும், - பூங்கொம்பு
போல்வளாகிய திருமகளும் தானும் நிலவு சிவ கதியுள் - நிலைத்தலையுடைய வீட்டினுள்,
நீங்காது நின்றான் - பிரிவின்றி ஒன்றி நிற்பானாயினன், (எ - று.)
சீவாத்திகாயம், புத்தகலாத்திகாயம், தன்மாத்திகாயம், அதன்மாத்திகாயம், ஆகாயாத்திகாயம்
இவ்வைந்தும் மூலப்பொருளாம். காலத்தோடு கூட்ட, மூலப்பொருள் ஆறாம், இவற்றின்
கூட்டமே உலோகமாம், ஆகாயத்திகாயம் மட்டும் அலோகம் என்று சொல்லப்படும்.
 

( 57 )