2128. அருமால் வினையகல வமரர் நாளு மடிபரவப்
பெருமான் பிரசாபதி பிரம லோக மினிதாளத்
திருமால் பெருநேமி 5திகழ்ந்த செந்தா மரைத்தடக்கைக்
கருமால் கடல்வரைத்த கண்ணார் ஞாலங் காக்கின்றான்.

     (இ - ள்.) அருமால் வினை அகல - கடத்தற்கரிய மயக்கத்தைப் பற்றி வருகின்ற
இருவினைத் தொடர்பு அகன்றொழியவும், அமரர் நாளும் அடிபரவ - தேவர்கள் நாடோறும்
தன் திருவடிகளை வாழ்த்தவும், பெருமான் பிரசாபதி - பெரியோனாகிய பயாபதி அடிகள்,
பிரமலோகம் இனிது ஆள - வீட்டுலகத்தை இனிதாக ஆட்சி செய்யாநிற்ப, திருமால் -
திருமாலாகிய திவிட்டமன்னன், பெருநேமி திகழ்ந்த - பெரிய ஆழிப்படை விளங்காநின்ற,
செந்தாமரைத் தடக்கை - செந்தாமரை மலர் போன்ற தன் பெரிய கைகளாலே, கருமால்
கடல் வரைத்த - கரிய பெரிய கடலை எல்லையாக உடைய, கண்ணார் ஞாலம் - இடம்
அகன்ற இவ்வுலகங்களை, காக்கின்றான் - இனிதே ஓம்பா நின்றான், (எ - று.)

பயாபதி மன்னன் வீட்டுலகினையும் அவன் மகன் மண்ணுலகினையும் ஒருங்கே ஆட்சி
செய்தனர் என்றபடி. கடல் வரைத்த - கடல்களை எல்லையாகவுடைய, எனவே
உலகமுழுதும் என்றபடி.
 

 ( 60 )