திவிட்டன் உலகாள்தற் சிறப்பு | 2129. | தங்கோ னமருலக 1மினிதி னாளத் தரங்கநீர்ப் பொங்கோ 2தம துடுத்த பூமி யெல்லாம் பொதுநீக்கிச் செங்கோ லினிதோச்சித் தேவர் காப்பத் திருமாலும் 3அங்கோல் வேலரச ரடிபா ராட்ட 4வாள்கின்றான். | (இ - ள்.) தங்கோன் அமருலகம் இனிது ஆள - தம் தலைவனாகிய பயாபதி வீட்டுலகத்தை இனிதாக ஆளாநிற்ப, தரங்கம் நீர் பொங்கு ஓதமது உடுத்த பூமி எல்லாம் - அலைகளையுடைய நீர் பொங்குகின்ற முழக்கமுடைய கடலை ஆடையாக உடுத்துள்ள நிலவலயம் முழுதையும், பொது நீக்கி - பலருக்கும் பொது என்னும் மொழி நிகழாதவாறு அகற்றித் தனக்கே உரிமையாக்கி, செங்கோல் இனிது ஓச்சி - செங்கோன்மை பிறழாதபடி முறை செய்து உயிர்கள் இன்புறும்படி அரசு செலுத்தி, தேவர்காப்ப - தன்னைத் தெய்வங்கள் பாதுகாவா நிற்ப, திருமாலும் - திவிட்டமன்னனும், அங்கோல் வேல் அரசர் அடி பாராட்ட - அழகிய செங்கோன்மையும் வேலும் உடைய மன்னர்கள் தனது திருவடியைப் புகழ்ந்து வாழ்த்தா நிற்ப, ஆள்கின்றான்-ஆட்சி செய்யா நின்றான், (எ - று.) பொது நீக்குதல் - இம்மண்ணுலகம் பல அரசற்கும் பொதுவானது என்னும் சொல்லை அகற்றுதல். ஒரே குடையின்கீழ்த் தனக்கு உரிமையாக இம்மண்ணுலகம் முழுதையும் ஆட்சி செய்தான் என்பது கருத்து. | ( 61 ) | | |
|
|