(இ - ள்.) ஆதிஅம்கடவுளை - எல்லாப் பொருள்களுக்கும் முதன்மையான அழகிய கடவுளாக இருக்கின்றாய், அருமறை பயந்தனை - அறிதற்கரிய மறைகளைத் தந்தருளினாய், போதி அம்கிழவனை - மெய்யறிவுக்கு உரியவனாக இருக்கின்றாய், பூ மிசை ஒதுங்கினை - தாமரை மலரின்மேற் சென்றருளினாய், போதி அம்கிழவனை - மெய்யறிவுக்கு உரியோனே! பூமிசை ஒதுங்கிய - தாமரை மலர்மேல் நடந்த; சேதி - வீடாகிய, அம்செல்வ - அழகிய செல்வத்திற்குரியவனே! நின்திருவடி வணங்கினம் - உனது அழகிய திருவடிகளைப் போற்றினோம். (எ - று.) அம் நான்கையும் சாரியையாகக் கொள்ளினும் அமையும். முதற் கடவுளாக இருக்கின்றாய்; அரிய மறைகளை அருளிச்செய்தாய்; மெய்யறிவுக்கு உரியவனாக இருக்கின்றாய்; தாமரை மலர்மேற்சென்ற ருளினாய். இத்தகைய நின் அடிகளை வணங்கினோம் என்பதாம். சேதி - வீடு; சேதி - சினாலயம் என்பாருமுளர்; அவரறியார். “சேதியின் நெறியின் வேறுசிந்தை செய்யாச் சாதுவர்“ என்புழி யசோதர காவியத்துச் சேதிநெறி - வீட்டுநெறி என்றே பொருள்படுதலான் என்க. யசோதர காவியம் 56 ஆம் செய்யுள் காண்க. கடவுளை, கிழவனை என்புழி ஐகாரம் முன்னிலை யசை. |