இதுவுமது
215. காமனைக் கடிந்தனை காலனைக் காய்ந்தனை
தேமலர் மாரியை திருமறு மார்பனை
தேமலர் மாரியை திருமறு மார்பனை
மாமலர் வண்ணநின் மலரடி வணங்கினம்.

    (இ - ள்.) காமனைக் கடிந்தனை - காமனைச் சினந்தாய். காலனைக் காய்ந்தனை -
கூற்றுவன் நின்பால் வராது தடுத்து வெற்றிகொண்டாய், தேன்மலர்மாரியை -
தேன்பொருந்திய மலர் மழையைப் பெறுபவனாக இருக்கின்றாய், திருமறுமார்பனை -
திருவாகிய மறுவைக்கொண்ட மார்பை யுடையவனாக இருக்கின்றாய், தேமலர் மாரியை -
தேமலர் மாரியை யுடையோனே! திருமறுமார்பனை - திருவாகிய மறுவணிந்த மார்பையுடை
யோனே! மாமலர்வண்ண - சிறந்த மலர்போன்ற மென்மைக் குணமுடையவனே, நின்
மலரடி வணங்கினம் - உனது தாமரை மலர் போன்ற திருவடிகளை வணங்கினோம்
(எ - று.)

காமற் காய்ந்தோன் என்பது அருகன் திருப்பெயர்களுள் ஒன்று. “களிசேர்கணையுடைய
காமனையுங் காய்ந்த அளிசேர் அறவாழி அண்ணலிவன் என்ப“ என்பது சீவகசிந்தாமணி,
காலனைக் காய்ந்தனை என்றது அழிவற்றோனாயிருக்கின்றனை என்றவாறு. போதி - அறிவு,
கடிந்தனை முதலியவற்றின்கண் ஐகாரம் முன்னிலைக்கண் வந்த அசைச்சொல்; “வான
வரம்பனை“ “கானகநாடனை“ என்பன போல.

( 97 )