(இ - ள்.) கரு - கரிய, வடி - கூரிய, நெடு - நெடிய, நல்வேல் - நல்ல வேற்படையைப் போன்ற, கண்ணி - கண்களையுடையவளான சுயம்பிரபை, இன்னணம் - இவ்வாறு, வெருவு உடை வினைப்பகை விலக்கும் வீறுசால் - உயிர்கள் அஞ்சப்படுதலை யுடைய கருமங்களாகிய பகைகளை நீக்கவல்ல பெருமை மிகுந்த, மருவு உடைமொழிகளால் - விரும்பப்படுந் தன்மையுள்ள சொற்களால், பரவி - அருகக்கடவுளை வழிபட்டு, வாமன திருஅடிச் சேடமும் - அருகக்கடவுளினுடைய திருவடிகளில் தூவிய மலராகிய சேடத்தையும் திகழச் சூடினாள் - விளங்குமாறு அணிந்துகொண்டாள். (எ - று.) கருவடி - கரியமாவடுவுமாம்; 'வடுப்பிள வனைய கண்ணாள்' என்பது சீவகசிந்தாமணி. சுயம்பிரபை அருகக்கடவுளை வழிபட்ட பிறகு அக்கடவுளின் அடிகளில் அருச்சித்த மலர்களைத் தன்னுடைய முடியிலே சூடிக்கொண்டாள். வாமன - திருவடி, அ, ஆறாம் வேற்றமைப் பன்மையுருபு, வாமனுடைய திருவடிகள், என்பது பொருள். |