சுயம்பிரபை தன் தந்தையின் அரண்மனையை அடைதல்

218. வானுயர் கடவுளை வயங்கு சேவடித்
தேனுயர் திருமலர்ச் சேடங் கொண்டபின்
மானுயர் நோக்கியர் பரவ மங்கைதன்
கோனுயர் வளநகர்க் கோயின் முன்னினாள்.
 

     (இ - ள்.) வான்உயர் கடவுளை - மிகச் சிறந்த தெய்வமான அருகக்கடவுளினது,
வயங்கு சேஅடி - விளங்குகிற சிவந்த திருவடிகளில் சாத்திய, தேன்உயர் திருமலர் - தேன்
மிக்க சிறந்தமலர்களாகிய, சேடம் கொண்டபின் - வழிப்பாட்டுப் பொருளைப்
பெற்றுக்கொண்ட பிறகு, மங்கை - சுயம்பிரபை, மான்உயர் நோக்கியர் பரவ -
மான்பார்வைபோலச் சிறந்தகண் பார்வையை உடையவர்களான தோழியர் வழிபாடு செய்ய,
தன்கோன் - தன் தந்தையினுடைய, உயர்வளம்நகர்க் கோயில் முன்னினாள் - சிறந்த
வளப்பமுள்ள நகரத்தின் கண்ணேயிருக்கின்ற அரண்மனையை அடைந்தாள். (எ - று.)

நோன்பு முதலியவற்றை முடித்துக்கொண்ட சுயம்பிரபை தன்னுடைய தந்தையின்
இருப்பிடத்தை அடைந்தனள். கடவுளை என்னுமிடத்தில் உருபு மயங்கிவந்தது. வானுயர் -
ஒருபொருட் பன்மொழி; வானுலகத்திலே உயர்ந்து விளங்குகின்ற கடவுள் எனினுமாம்.

( 100 )