அரசன் தன் மகளை உச்சிமோந்து சில மொழிகள்
சொல்லத் தொடங்குதல்

220. அல்லியி னரவவண் டிரிய வாய்மலர்
வல்லியின் வணங்கிய மகளை மன்னவன்
முல்லையஞ் சிகழிகை 2முச்சி மோந்திவை
சொல்லிய தொடங்கினான் சுடரும் வேலினான்.
 

     (இ - ள்.) சுடரும் வேலினான் மன்னவன் - ஒளிவிடுகின்ற வேற் படையை
யுடையவனாகிய சுவலனசடியரசன், அல்லியின் அரவவண்டு இரிய - அணிந்துள்ள
மலர்களின் உள்ளிதழ்களிற் பொருந்தியுள்ள வண்டுகள் அகலும்படி, ஆய்மலர் வல்லியின்
வணங்கிய - சிறந்த பூங்கொடியைப்போலப் பணிந்த, மகளை - தன் மகளான
சுயம்பிரபையை, முல்லைஅம் சிகழிகை முச்சி மோந்து - முல்லைப்பூ மாலையை
அணிந்த அழகிய மயிர்முடியையுடைய உச்சியை மோந்து, இவை சொல்லிய தொடங்கினான்
- இந்த மொழிகளைச் சொல்லலானான் (எ - று.)

அல்லி - அகவிதழ். “அல்லி அகவிதழ்; புல்லி புறவிதழ்“ என்பன சூத்திரங்கள். அல்லி -
பூந்தாது எனினுமாம். சொல்லுபவைகளை அடுத்துவருஞ் செய்யுள்களில் காண்க.

( 102 )