ஐந்து பாடல்கள் அரசன் தன் மகளைப் புகழ்ந்துரைத்தல்

221. தேந்துணர் பலவுள வேனுஞ் செங்குழை
மாந்துணர் வயந்தனை மலரத் தோன்றுமே
பூந்துண ரோதிநீ 1பிறந்து 2பொன்செய்தார்
வேந்துவந் திறைஞ்சயான் விளங்கு கின்றதே.
 

     (இ - ள்.) தேம்துணர் பலவுளவேனும் - தேனையுடைய பூங்கொத்துக்கள் பல
இருந்தாலும், செங்குழை மாந்துணர் - செந்நிறமான தளிர்களையுடைய மாமரத்தின்
பூங்கொத்து, வயந்தனை மலரத் தோன்றும் - வசந்தகாலம் விளக்கமடையும்படியாக மலரும்,
பூந்துணர் ஓதி - பூங்கொத்துக்களை யணிந்த கூந்தலை யுடையவளே! நீ பிறந்து - நீ
பிறந்தபடியினாலேயே, பொன்செய்தார் வேந்து இறைஞ்ச - பொன்னாற் செய்யப்பட்ட
மாலையை அணிந்த அரசர்கள் வந்து வணங்கும்படி, யான் விளங்குகின்றது - நான் சிறந்து
விளங்குபடியாகியது. (எ - று.)
“மலர்கள் பல இருந்தாலும் மாம்பூவினால் வசந்த காலத்திற்குப் பொலிவு உண்டாவதுபோல,
சுற்றத்தார் பலர் இருந்தாலும், நீ பிறந்த பின்புதான் வேற்றுநாட்டரசர் பலர் வந்து
வணங்கும்படியான பெருமை எனக்கு உளதாயிற்று“ என்று அரசன் தன்மகளைப் பாராட்டிக்
கூறுகிறான். முன்னிரண்டடிகள் உபமானம்; பின்னிரண்டடிகள் உபமேயம். வயந்தனை,
ஐ,சாரியை.

( 103 )