இதுவுமது
223. போதுலாந் தாமரை பூத்த பொய்கையைத்
தீதுலாங் கீழுயிர் தீண்டச் செல்லல
மாதுலா மடந்தைநீ பிறந்திம் மண்டில
மேதிலா ரிடைதிற மிகந்து நின்றதே.

    (இ - ள்.) போதுஉலாம் தாமரை பூத்த பொய்கையை - ஞாயிறு தோன்றுங்காலத்தில்
தவறாது மலருமியல்புள்ள தாமரை மலர்கள் மலரப்பெற்ற பொய்கையை, தீது உலாம் கீழ்
உயிர் தீண்டச் செல்லல - தீமை பொருந்திய கீழ்மைப் பட்ட உயிர்கள் தொடுதற்குச்
செல்லமாட்டா, மாது உலாம் மடந்தை - அழகு மிகுந்து விளங்கும் பெண்ணே, நீ பிறந்து -
நீ பிறந்ததனால், இம்மண்டிலம் - இந்த நாடு, ஏதிலார் இடை திறம் இகழ்ந்து நின்றது -
பகைவர்கள் தோற்றுப் பின்னிடும் படியாக அவர்களைக் கடந்து நின்றது.
(எ - று.)

    தாமரை பூத்த தடாகத்தை அன்னப்பறவை வண்டு முதலிய சிறந்த உயிர்கள் சேருமே
யல்லாமல், காக்கை முதலிய கீழ் உயிர்கள் அடைய மாட்டா; அதைப்போல் நீ பிறந்தபின் இந்த நாட்டில் நல்லவர்கள் சேரலானர் களேயல்லாமல், தீயவர்களால் பீடிக்கப்பட்டுத்
தொல்லைக்குள்ளாக வில்லை யென்று அரசன் தன்னுடைய மகளைப் பாராட்டுகிறான்.
பொய்கை மானிட ரால் ஆக்கப்பெறாத நீர்நிலை என்பது நச்சினார்க்கினியர் கொள்கை.

( 105 )