224. வானகத் திளம்பிறை வளர வையகம்
ஈனகத் திருள்கெட வின்ப மெய்துமே
நானகக் குழலிநீ வளர நங்குடி
தானகத் திருள்கெடத் தயங்கு கின்றதே.
 

     (இ - ள்.) வான் அகத்து இளம்பிறை வளர - வானத்திலே இளமையான
பிறைத்திங்கள் உண்டாகி வளர்தலால், வையகம் - நிலவுலகம், ஈன் அகத்து இருள்கெட -
இவ்விடத்து இருளானது நீங்க, இன்பம் எய்தும் - மகிழ்ச்சியை அடையும், நானகக் குழலி -
கத்தூரிப் புழுகு பூசிய கூந்தலையுடையவளே! நீ வளர - நீ பிறந்து வளர்தலால், நம்குடி -
நமது குடியானது, தான் அகத்து இருள்கெடத் தயங்குகின்றது - தன்னிடத்திலே பகையிருள்
ஒழிந்து விளங்குகின்றது. (எ - று.)

விண்ணில் இளம்பிறை தோன்றி வளர்தலால் நிலவுலகம் இருள்கெட இன்பமடைவதுபோல;
நீ தோன்றி வளர்தலால் நமது குடி பகையிருள்கெட விளக்கமடைகின்றது என்கிறான்
அரசன். ஈனகம் - இவ்விடம்.

( 106 )