(இ - ள்.) மன்னன் - சுவலனசடியரசன், கொவ்வையந் துவரிதழ்க் கோலவாய் அவட்கு - கொவ்வைப்பழம் போலச் சிவந்த இதழ்களையுடைய அழகிய வாயையுடைய தன் மகளுக்கு, இவ்வகை அணியன கூறி - இவ்வாறு அழகிய மொழிகளைச் சொல்லி, ஈண்டு - இப்பொழுது, நும் அவ்வைதன் கோயில்புக்கு - நின்னுடைய தாயின் அரண்மனையை அடைந்து, அடிசில் உண்க என - உணவு உண்பாயாக என்று கூறி, மவ்வல் அம் குழலியை ஏயினான் - முல்லை மலரை யணிந்த அழகிய கூந்தலையுடைய தன் மகளாகிய சுயம்பிரபையைப் போக்கினான். (எ - று.) சக்கரவாள நோன்பு உணவுவிட்டு நோற்கும் நோன்புகளுள் ஒன்றாகையால், அதன்படி பட்டினிகிடந்த சுயம்பிரபையைத் தன் தாயினிடத்தே சென்று விரைவில் உணவு கொள்ளுமாறு அனுப்பினான் மன்னன். கொவ்வை, மவ்வல் என்ற கொடிகளின் பெயர் அவற்றின் பழத்திற்கும் பூவிற்கும் முதலாகுபெயர். இதழ் - உதடு. அணியன கூறி - அழகிய புனைந்துரை மொழிகளை உரைத்து. நும்தாய் என்றது, யான் எம்மூர்க்குச் செல்வேன் என்றாற்போன்று அவளுடன் பிறந்தானையும் உளப்படுத்தி நின்றது. அவ்வை, மவ்வல் - முதற்போலி ஒளவை, மௌவல். அடப்பட்டது அடிசில் என உணவுக்குக் காரணப் பெயர். |