கட்டளையும் மகிழ்ச்சியும்

227. பல்கலம் பெரியன வணியிற் பாவைத
னல்குனோ மெனச்சிலம் பணிந்து மெல்லவே
செல்கவென் றிருமக ளென்று செம்பொனான்
மல்கிய 1முடியினான் மகிழ்ந்து நோக்கினான்.
 

     (இ - ள்.) செம்பொனால் மல்கிய முடியினான் - செம் பொன்னினால் செய்யப்பெற்று
விளங்குகிற திருமுடியையுடையவனான சுவலனசடியரச னானவன்; பல்கலம் பெரியன
அணியில் - பலவகை யணிகலன்களைப் பெரியனவாக வணிந்தால், பாவைதன் அல்குல்
நோம் என - சுயம்பிரபை யினுடைய இடையானது வருத்தத்தை யடையுமென்று, சிலம்பு
அணிந்து - சிலம்பு என்னும் அணிகலனைப் பூண்டு, என் திருமகள் - என்னுடைய அழகிய
செல்வியே! மெல்லவே செல்க என்று - விரைந்து செல்லாமல் மெதுவாகவே செல்க என்று
கூறி, மகிழ்ந்து நோக்கினான் - அவள் அவ்வாறு செல்வதைப் பார்த்து மகிழ்ந்தான்
(எ - று.)

நோன்பினால் தளர்ந்துள்ள சுயம்பிரபை, பெரியவைகளான பல அணிகலன்களை அணிந்து
சென்றால் மேலும் வருத்தத்தை அடைவா ளாகலின், சிலம்பை மட்டும் அணிந்து
மெதுவாகச் செல்லுமாறு அரசன் கட்டளையிட்டான்.

( 109 )