மங்கையர் இயற்கை

230. பொலங்கலக் குரியவாம் பொருவின் மாமணி
யிலங்கல மென்னல வீயஞ் சேர்த்தினும்
குலங்கலந் தில்வழிக் குரவர் 1கூட்டினும்
மலங்கலங் குழலிய ரன்றென் கிற்பவோ.
 

      (இ - ள்.) பொலம் கலக்கு உரியஆம் - பொன்னினால் ஆகிய அணிகலங்களிற் பதித்தற்கு உரியனவாகிய, பொருவு இல் மாமணி - ஒப்பில்லாத சிறந்த மணிகள், ஈயம் சேர்த்தினும். ஈய அணிகலன்களிற் பதிப்பிக்கத் தொடங்கினும், இலங்கலம் என்னல - யாங்கள் விளங்க மாட்டோம் என்று கூறமாட்டாவாம், குலம்கலந்து இல்வழி - மேன்மையான குல நலம் பொருந்தியில்லாவிட்டாலும், குரவர் கூட்டினும் - தாய் தந்தையர் ஒருவனுக்கு மணஞ்செய்விக்கத் தொடங்கிய காலத்தில், அலங்கல் அம்குழலியர் - மாலையை அணிந்த கூந்தலையுடையவர்களான பெண்கள், அன்று என்கிற்பவோ - அது கூடாதென்று மறுப்பார்களோ? மறுக்க மாட்டார்கள்.
(எ - று.)

பொன்னணியில் சேர்த்துப் பதிக்கப்படவேண்டிய ஒப்பற்ற மணிகள், ஈயத்திற்
பதிப்பிக்கப்பட்டாலும் மறுக்காமல் அங்கும் பொருந்தி விளங்கும்; அதைப்போன்று
மேன்மைகள் யாவும் சிறந்து அமையப்பெறாத மணாளர்கட்கு மணஞ்செய்து கொடுப்பினும்
மங்கையர் மறுக்காமல் உடன்பட்டே யிருப்பர் என்பதாம். இவ்வாறு முற்றிலும்
தாய்தந்தையர் எண்ணப்படி உடன்பட்டு நடக்கும் மங்கையர்கட்குத், தக்க கணவர்களைத்
தேர்ந்தெடுக்குங்கடமை பெற்றோர்க்கு ஏற்பட்டிருப்பது குறித்து எண்ணமிடு கிறான் அரசன்.
கலக்கு - கலத்துக்கு - அத்துச்சாரியை தொக்கது. குரவர் - பெரியோர்.

( 112 )