(இ - ள்.) தாம் அந்தை உறுவது கருதி - தாம் நன்மையடைவதை யெண்ணி, ஆர் உயிர்த் தந்தை தாய் என்ற இவர் - அருமையான உயிர்போன்ற தந்தையும் தாயும் என்ற இவர்கள், கொடுப்பின் - மணஞ்செய்து கொடுத்தால், தையலார் - பெண்கள், சிந்தை தாய் இலாதவர் திறத்தும் - தமது உள்ளஞ்சேரப் பெறாதவரிடத்தும், செவ்வனே - நன்றாக நடந்து கொள்வார் களேயல்லாமல், தாம்நொந்து - தாங்கள் மனம்வருந்தி, பிறிது உரை நொடிய வல்லரோ - மாறான மொழியைச் சொல்ல வல்லவர்களாவார்களோ? ஆகமாட்டார்கள். (எ - று.) வறியரான தாய்தந்தையர் தாம் நன்மை அடைவது ஒன்றை மட்டும் எண்ணி, மங்கையர்க்குப் பொருத்தமில்லாதவருக்கு மணஞ் செய்து கொடுத்துத் தீமையைச் செய்துவிட்டாலும்கூட, மங்கையர் மனம் வருந்தி அந்தத் தாய் தந்தையர்மீது குற்றஞ்சொல்லமாட்டார்கள் என்பது அரசன் முடிவு. அந்தை - அந்தம் என்பதன் விகாரம். தாயிலாதவர் - தாவியிலாதவர்; தாய்: இறந்தகால வினையெச்சம். மனத்திற்குப் பிடிக்காதவர்களிடத்திலும் என்பது கருத்து. |