(இ - ள்.) காமம் - சிற்றின்ப நோக்கமானது, காதலால் அறிவது - காதலைக்கொண்டு ஒருவாறு உணரப்பெறும், காதல் - சிற்றின்பவுணர்வு, ஏதிலார் உணர்வினால் எண்ணல் ஆவது அன்று - மற்றையோருடைய உணர்ச்சியினால் அளந்தறியக்கூடியது அன்று, ஆதலான் - ஆகையினாலே, மாதராள் திறத்தில் - சுயம்பிரபையின் செயலில், ஆணைநூல் - அறநூலை, ஓதினார் உரைவழி - படித்தறிந்தவர்களது சொல்லின் வழியே, ஒட்டற்பாலது - பொருந்த நடக்குதல் வேண்டும். (எ - று.) காதலைக்கொண்டு காமத்தை அளவுபடுத்துதல் வேண்டும்; காத னுண்மையையும் இன்மையையும் மற்றையோர் அறியார். சுயம்பிரபை திறத்தில் நாமாகச் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. அமைச்சர்களைக் கூட்டிக் கலந்தெண்ணியே ஒரு முடிவுக்கு வருதல் வேண்டும் என்று அரசன் ஒரு முடிவிற்கு வருகிறான். ஏதிலார் - அயலார்; ஏதும் தொடர்பில்லாதவர் என்க. |