அரசர் வாழ்க்கையும் அமைச்சர்களும்

233. தன்னுணர் 3பொறிபிறர் தங்கண் கூட்டென
வின்னண மிருவகைத் திறைவர் 4வாழ்க்கையே
தன்னுணர் பொறிப்புலந் தன்னி னாம்பிறி
தின்னண மியற்றுகென் றமைச்ச ரேவுவார்.
 

     (இ - ள்.) இறைவர் வாழ்க்கை - அரசர்களுடைய வாழ்கையானது, தன் உணர்பொறி
- தம்முள்ளுணர்வாகிய ஊழான் ஆவது, பிறர் தங்கள் கூட்டுஎன - ஏனையோர்
கூட்டுறவாலாவது என்று, இன்னணம் இருவகைத்து - இவ்வாறு இரண்டு வகைப்படும்,
தன்னுணர் பொறிப்புலம் தன்னின் ஆம் - தன்னுணர்வு கொண்டு எண்ணிச் செய்யும்
செயல் தன்னாலேயே உண்டாம், பிறிது - மற்றொன்றோ, இன்னணம் இயற்றுக என்று -
இவ்வாறு செய்க என்று, அமைச்சர் ஏவுவார் - அமைச்ச ரானோர் சொல்லிச் செய்யுமாறு
செலுத்துவார்கள், (எ - று.)

அரசர் வாழ்க்கையை ஆராயுமிடத்தில், அவர்களுடைய செயல், இருவகையாக
இயங்குகின்றது. தம்பொறிகளாலும் அறிவாலும் கண்டு உணர்வது ஒன்று; பிறர் கண்ணும்
அறிவும் கொண்டு கண்டு உணர்வது மற்றொன்று. முன்னையது தம்மால் எழுவது; பின்னது
அமைச்சர் முடிவால் எழுவது. இறைவர் வாழ்க்கை என்பதற்கு அரசர்களுடைய
மணவாழ்க்கை என்றும் பொருள் உரைக்கின்றனர். அமைச்சர் - அமாத்யர் என்னும் வடசொல்லின் விகாரம்; அண்மையில் இருப்பவர் என்பது காரணப்பொருள். அமா -
அண்மை.

( 115 )