(இ - ள்.) தாமரை - தாமரை மலர்கள், தண்ணிய தடத்தவே எனினும் - குளிர்ந்த தடாகத்திலுள்ளனவே என்றாலும், விண்இயல் கதிரினால் விரியும் - வானத்திற் பொருந்திய ஞாயிற்றினுடைய ஒளியினால் மலரும், அது போலவே; வேந்தரும் - அரசர்களும், புண்ணியப் பொதும்பரே புரிந்து வைகினும் - நல்வினையாகிய சோலையிலேயே விரும்பித்தங்கி யிருந்தாலும், கண்ணிய புலவரால் அலர்தல் காண்டும் - நன்கு மதிக்கத்தக்க அறிஞர்களால் விளக்கமடைதலைப் பார்க்கின்றோம். (எ - று.) குளிர்ச்சியான நீர் வளமுள்ள தடாகத்தில் செழித்து வளருகின்ற தாமரை மலர்தற்கு விண்ணில் விளங்குகின்ற கதிரவனது ஒளியின் தொடர்பு இன்றியமையாதவாறுபோல அரசர்கள் நல்வினைச்செறிவில் பெருமை பெற்றிருந்தாலும் அவர்கள் மேன்மையடைவதற்கு அமைச்சர்களைக் கலந்தாராய்தல் இன்றியமையாதது என்பதாம். பொதும்பர் - மரச்செறிவு. தண்ணிய - தன்மையையுடைய; பண்படியாகப் பிறந்த குறிப்புப் பெயரெச்சம். தடத்த; பலவின்பாற் குறிப்பு வினையாலணையும் பெயர். புலவர் என்பது ஈண்டு அரசியல் நூல்களில் புலமை வாய்ந்த அமைச்சர்களை உணர்த்தி நின்றது. |