அமைச்சர் அறிவுரையால் அரசியல் இனிது
நடைபெறும் என்றல்

235.

மாலமர் நெடுங்கடன் மதலை மாசிலாக்
காலமைந் தொழுகுமேற் கரையுங் காணுமே
நூலவர் நுழைவொடு நுழைந்து செல்லுமேல்
வேலவ ரொழுக்கமும் வேலை காணுமே.
 

     (இ - ள்.) மால் அமர் நெடுங்கடல் மதலை - கருநிறமமைந்த நீண்ட கடலிலே
செல்லும் மரக்கலமானது, மாசு இலாக்கால் அமைந்து ஒழுகுமேல் - குற்றமில்லாத
காற்றோடு கூடிச் செல்லுமானால், கரைகாணும் - தான் குறித்துச் செல்லும் கரையை
அடையும், அதைபோல; வேலவர் ஒழுக்கமும் - வேற்படையை யேந்துகிற அரசர்களுடைய
செயல்களும், நூலவர் நுழைவொடு நுழைந்து செல்லுமேல் -
அறநூல்களையுணர்ந்தவர்களான அமைச்சர்களது சூழ்ச்சித் துணையோடுகூடி நுட்பமாக
நடக்குமானால், வேலை காணும் - அரசாட்சி வெற்றியாகிய கரையை அடையும். (எ - று.)

கடலிற் செல்லுகின்ற மரக்கலம் தொல்லையில்லாமல் குறிப்பிட்ட கரையிலே இனிது சென்று
சேர்தற்கு, உதவியான காற்றின்துணை இன்றியமையாதவாறுபோல, அரசருடைய செயல்
எண்ணியபடி இனிமையாய் வெற்றி பெறுவதற்கு, அமைச்சர்களுடைய நுட்பமான சூழ்ச்சித்
துணைமை இன்றியமையாத தென்பதாம். முன் செய்யுளில் அமைச்சர்களைப் புலவர்கள்
என்றுரைத்த ஆசிரியர் இச்செய்யுளில் நூலவர் என்று குறிப்பிட்டார். வேலை காணும்
என்பதற்குக் காரியத்தை நன்கு செய்து முடிக்கும் என்று பொருளுரைப்பினுமாம்.

( 117 )