(இ - ள்.) ஒருவன் ஒன்று நன்று என உணர்ந்து கொள்ளுமேல் - ஒருவன் ஒரு செயலை நல்லதாக முடிவுசெய்து அதனைச் செய்யத் தொடங்குவானானால்; அன்று அது என ஒருவனுக்கு அறிவு தோன்றும் - அச்செயல் நல்லது அன்று என்று மற்றொருவனுடைய அறிவிலே புலப்படும்; ஆகையால் இனி நின்றது ஒன்று உண்டு - இனி யான் மேற்கொள்ளற் பாலதாக எஞ்சிநின்ற ஒருபொருள் உளது அஃதென்னெனின்; நீதி நூலினோடு ஒன்றி நின்றவர் உரை உலகம் ஒட்டுமே - அறநூல்களை யுணர்ந்த அறிஞர்கள் மொழியேயாகும். அதன் படி ஒழகின் இவ்வுலகமானது அச்செயலை ஒப்புக்கொள்ளும். (எ - று.) ஒருவன் அறிவுக்கு ஒன்று நல்லதென்று தோன்றுகையில், அதுவே மற்றொருவன் அறிவுக்கு நல்லது அன்று என்று தோன்றுதல் கூடும். ஆகவே ஒன்றைச் சிறப்பாக உறுதி செய்வதற்கு, ஒருவனுடைய அறிவுமட்டும் போதாது. பிறருடைய சூழ்ச்சித் துணையையுங் கலந்து செய்வதே தகுதி; ஆகையால் நான் இப்பொழுது சுயம்பிரபையின் திருமணத்தின் பொருட்டுச் செய்யவேண்டியது யாதெனில். அமைச்சர்களைக் கலந்தெண்ணுவதேயாம். அவ்வாறு செய்யின் உலகம் அதனை ஒப்புக்கொள்ளும் என்று சுவலனசடியரசன் முடிவு செய்தான். ஒட்டுதல் - உடன்படுதல். |