(இ - ள்.) அந்தணர் ஒழுக்கமும் - முனிவர்களது தவவொழுக்கமும்; அரைசர் வாழ்க்கையும் - அரசர்களுடைய சிறந்த நல்வாழ்வும்; மந்திரம் இல்லையேல் - மந்திரத்தோடு கூடியதாக இல்லாவிட்டால்; மலரும் மாண்பில சிறந்து விளங்கும் பெருமையோடு கூடியதாக அமையமாட்டா; இந்திரன் இறைமையும் - இந்திரனுடைய அரசாட்சிச் சுமையும்; தந்திரக் கிழவர்கள் ஈர் ஐஞ்ஞூற்றுவர் தாங்கச் செல்லும் - அமைச்சர்கள் ஆயிரம்பேர்கள் உடனிருந்து தாங்க நடைபெறுவதாகும், (எ - று.) மந்திரம் - அந்தணர் ஒழுக்கத்திற்கு வேதமந்திரமும், அரசர் வாழ்க்கைக்கு அமைச்சர்களோடு கலந்தெண்ணுதலுமாம்; செம்மொழிச் சிலேடை. அந்தணர் வாழ்க்கை மறைமொழியோடு கூடாவிடின் பயன்தராது; அதைப்போல் அரசர் வாழ்க்கை அமைச்சர்களின் சூழ்ச்சித்துணை யில்லாவிட்டால் பயன்தராது. தந்திரக்கிழவர் - ஈண்டு அமைச்சர். இந்திரன் ஆயிரம் அமைச்சர்களைச் சூழ்ச்சித் துணையாகக் கொண்டுள்ளான் என்று நூல்கள் கூறும். |