(இ - ள்.) என்று தன் மனத்தினான் எண்ணி - இவ்வகையாகச் சுவலனசடியரசன் தன்னுள்ளத்திலே நினைத்து; ஈண்டு சீர் நின்ற - நிறைந்த புகழானது நிலைபெற்று நின்ற; நூல் கிழமையின் நீதி மாக்களை - நூல்களைப் படித்தறிந்து அவைகட்கு உரிமை பூண்டவர்களாக நின்ற அறநெறியுணர்ந்த அமைச்சர்களை; ஒன்றி - அடைந்து; நீர் தருக என - நீர் இங்கு அழைத்து வருகவென்று கட்டளையிட; உழைக்குற்றேவலார் - அண்மையிலிருந்த ஏவலாளர்கள்; சென்று - அமைச்சர்களிடம் போய்; அவர்க்கு - அவ்வமைச்சர்களுக்கு; அருள் இது என்று செப்பினார் - அரசன் இட்ட கட்டளை இஃதாகும் என்று செய்தியைக் கூறினார்கள். (எ -று.) இப்படிப் பலவாறு எண்ணமிட்ட சுவலனசடி மன்னன், தன் அண்மையில் இருந்த ஏவலர்களைப் பார்த்து, “அமைச்சர்களை அழைத்து வாருங்கள்“ என்று கட்டளையிட்டான். ஏவலர்கள் அமைச்சர்களிடஞ் சென்று செய்தியைத் தெரியப்படுத்தினார்கள். ஈண்டுசீர் - நிறைந்தபுகழ்.நீதிமாக்களை - மக்கள் என்னுஞ்சொல் நீண்டு நின்றது. தருகவென எனற்பாலது தருகென என நின்றது; தொகுத்தல் விகாரம். சுவலனசடியரசனுக்கு அமைச்சர்கள் சுசுருதன், பஹுசுருதன், சுருதசாகரன், சுமதி என நால்வர் என்ப. |