அமைச்சர்கள் அரசனிடத்திற்கு வருதல்
239. செஞ்சினைத் தெரியலா னருளிச் செய்தது
தஞ்செவிக் கிசைத்தலுந் தணப்பில் கேள்வியா
ரஞ்சினர் நடுங்கின ராகி யாயிடை
நஞ்சிவர் வேலினான் பாத நண்ணினார்.
 
     (இ - ள்.) தணப்பில் கேள்வியார் - நீங்காத கல்வியறிவை யுடையவர்களாகிய அமைச்சர்கள்; செஞ்சினைத் தெரியலான் அருளிச் செய்தது - அழகிய கிளைகளில் தோன்றிய மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்த சுவலனசடியரசனுடைய செய்தியானது; தம் செவிக்கு இசைத்தலும் - தங்களுடைய காதுகளிலே கேட்ட அளவில், அஞ்சினர் நடுங்கினர். ஆகி - மிகவும் அஞ்சி நடுங்கினவர்களாகி, ஆயிடை அப்பொழுதே; நஞ்சு இவர் வேலினான்பாதம் நண்ணினார் - நஞ்சு தடவப் பெற்ற வேற்படையையுடையவனாகிய சுவலனசடியரசனின் அடிகளைச் சென்று வணங்கினார்கள் (எ - று.)

செஞ்சினை - செவ்விய கிளை. தெரியலான் - சுவலனசடி மன்னன். கேள்வியார் - ஈண்டு
அமைச்சர். அஞ்சினர்: முற்றெச்சம். வேலினான் - சுவலனசடி மன்னன்.

( 1 )