(இ - ள்.) வெண்முளைப் பசும் தாமரை மென்சுருள்-வெள்ளிய முளையினையுடைய பசிய தாமரையின் மெல்லிய இலைச் சுருளை; முள்முளைத் திரளொடு-முள்பொருந்திய நாளங்களுடன்; முனிந்துகொண்டு-வெறுத்துக்கொண்டு; உள்முளைத்து-நீர்க்குள் மூழ்கியெழுந்து; இள அன்னம் உழக்கலால்-அன்னப் பார்ப்புக்கள் நீரைக் கலக்குதலால்; தடத்தகழி எலாம்-பெரியகழியிடமெல்லாம்; கள் முளைத்த-தேன் தோன்றலாயின (எ - று.) கண்முளைத்த தடத்த எனப் பிரித்துக் கண்கள் தோன்றி மலர்ந்தாற் போன்ற இடத்தையுடையன என்று பொருள் கூறினும் பொருந்தும். வெண்முளைப் பசுந்தாமரை-முரண்டொடை. மரஞ்செடி கொடி வகைகளுக் குள்ள, கோழரை, பொரியரை, பொகுட்டரை, முள்ளரை என்னும் நான்கு வகையுள் தாமரை முள்ளரையுடையது. தடத்த-பலவின்பால் முற்று. கழி-கடற்கரையை ஒட்டிய உப்பங்கழி. |