வேறு
மன்னன் அமைச்சர் மாண்பு கூறுதல்

242. 2மண்ணியல் வளாகங் காக்கு 3மன்னவர் வணக்க லாகாப்
புண்ணிய நீர ரேனும் புலவராற் புகலப் பட்ட
நுண்ணிய நூலி னன்றி நுழை 4பொரு ளுணர்த றேற்றா
ரெண்ணிய துணிந்து செய்யுஞ் சூழ்ச்சியு மில்லை யன்றே.
 

     (இ - ள்.) மண்ணியல் வளாகம் காக்கும் மன்னவர் - மண்திணிந்த இந்
நிலவுலகத்தைப் புரக்கும் அரசரானவர்கள். வணக்கலாகாப் புண்ணியநீர ரேனும் -
எவராலும் வளையச் செய்தற்கு அரிய நல்வினையை உடையவர்களாயினும், புலவராற்
புகலப்பட்ட - நுண்மாண் நுழைபுல மிக்க அறிஞர்களாற் கூறப்பெற்ற, நுண்ணிய நூலின்
அன்றி - நுட்பமான பொருளையுடைய அறநூல்களால் அல்லாமல், நுழைபொருள்
உணர்தல் தேற்றார் - தாம் மேற்கொள்ளவேண்டிய செயல்களை நன்குணர மாட்டார்கள்,
எண்ணிய - உள்ளத்தின்கண் நினைத்த செயல்களை, துணிந்து செய்யும் சூழ்ச்சியும் இல்லை
- உறுதியாக நிலைபெறச் செய்யும் அறிவுத்திறமும் அவர்கட்கு உண்டாக மாட்டாது
(எ - று.) அன்றே : அசை.

அரசர்கள் எத்தகையோரையும் வணங்கார். அவர்களை வணங்கச் செய்தலும் அரிது.
ஆயினும் அவர்கள் அறிஞராற் செய்யப்பட்ட அற நூல்களைப் படித்தறிந்தாலல்லாமல்
செய்யவேண்டிய செயல்களையும் விலக்கவேண்டிய செயல்களையும் அறியமாட்டார்கள்.

( 4 )