அமைச்சர் மாண்பு

243. வால்வளை 1பரவி மேயும் வளர்திரை வளாக மெல்லாம்
கோல்வளை வுறாமற் காக்குங் கொற்றவ னெடிய னேனும்
மேல்விளை பழியும் வெய்ய வினைகளும் விலக்கி நின்றார்
நூல்விளை புலவ ரன்றே நுணங்குபோ தணங்கு தாரீர்.
 

     (இ - ள்.) நுணங்குபோது அணங்குதாரீர் - நுண்ணிய மலர்களமைந்த
அழகியமாலையையணிந்த அமைச்சர்காள்!, வால்வளை பரவிமேயும் - வெள்ளிய
சங்குகளானவை எங்கும் பரந்து மேயப்பெறுகிற, வளர்திரை வளாகம் எல்லாம் - மிகுந்த
அலைகள் உண்டாகப் பெறுகிற கடல் சூழ்ந்த உலகத்தை எல்லாம்; கோல்வளைவு உறாமல்
காக்கும் - செங்கோலானது வளையாமல் அரசாட்சி செய்கின்ற, கொற்றவன் நெடியனேனும்
- அரசனானவன் தன்னளவிலே பெருமையால் உயர்ந்தோனாயினும், மேல்விளை பழியும்
வெய்ய வினைகளும் விலக்கி நின்றார் - மேலே உண்டாகத்தக்க இழிசெயல்களையும்
கொடிய செயல்களையும் தானே தடுத்துக்கொள்ளும் ஆற்றலுடையானாகான் அவற்றைத்
தடுத்து நிற்போர், நூல்விளை புலவர் அன்றே - அறநூல் நெறிகளையெல்லாம்
அமைக்கின்ற அறிஞர்களல்லரோ ? (எ - று.)

அரசன் மிகுந்த பெருமையோடு கூடியவனாக இருந்தாலும் அவன் செய்வதையும்
தவிர்வதையும் அறியான். அவனை நல்வழியிற் செலுத்துவோர் அமைச்சர்களே என்று
அரசன் அமைச்சர்களைப் புகழ்ந்து கூறுகிறான்.

( 5 )