அரசனுக்கு அனைத்தும் ஆகுபவர் அமைச்சர்களே

244. சுற்றுநின் றெரியுஞ் செம்பொன் மணிமுடி சுடரச் சூட்டி
1வெற்றிவெண் குடையி னீழல் வேந்தன்வீற் றிருக்கு மேனு
மற்றவன் மனமுங் கண்ணும் வாழ்க்கையும் வலியுஞ் சால்பு
மற்றமி லரசுங் கோலு மாபவ ரமைச்ச ரன்றே.
 

     (இ - ள்.) வேந்தன் - அரசனானவன், சுற்று நின்று எரியும் - சுற்றுப் பக்கங்களிலே
ஒளியைப் பரப்பும், செம்பொன் மணிமுடி சுடரச்சூட்டி - சிவந்த பொன்னினால் ஆகிய
அழகிய முடியை விளங்குமாறு அணிந்து; வெற்றி வெண் குடையின் நீழல் -
வெண்கொற்றக்குடையின் நிழலிலே, வீற்றிருக்குமேனும் - அமர்ந்திருப்பானாயினும், அவன்
மனமும் கண்ணும் வாழ்க்கையும் வலியும் சால்பும் - அவ்வரசனுடைய உள்ளமும்
பார்வையும் இன்பவாழ்க்கையும் ஆற்றலும் மேன்மையும், அற்றம்இல் அரசும் கோலும்
ஆபவர் அமைச்சர் - குற்றமில்லாத அரசாட்சியும் செங்கோலும் ஆகிவிளங்குபவர்
அமைச்சர்களே ஆவர் (எ - று.) மற்று வினைமாற்றுப் பொருளில் வந்தது, அன்றே:
ஈற்றசை.

சற்று நின்று எரிதல் எல்லாப் பக்கங்களினும் ஒளி செய்து நிற்றல். அரசன் முடியை
அணிந்துகொண்டு அரியணையில் அழகாக அமர்ந்திருப்பினும் பொம்மையைப் போன்றவன்.
எண்ணுதல், பார்த்தல், செயல்புரிதல் முதலியவைகளைச் செய்து அரசனை இயங்கச்
செய்பவர்கள் அமைச்சர்களே என்கிறான். இதனால் அம்மன்னனுடைய பணிவுடைமை
இனிது விளங்கும்.

( 6 )