(இ - ள்.) தளை அவிழ் தயங்குதாரீர் - கட்டவிழ்ந்த மலர்கள் பொருந்திய மாலையை அணிந்த அமைச்சர்காள்!, வீங்குநீர் உலகம் காக்கும் விழுநுகம் - மிகுந்த நீர் பொருந்திய கடலாற் சூழப்பட்ட உலகத்தினைப் பாதுகாக்கும் உயரிய அரசாட்சிச் சுமையானது, ஒருவனாலே தாங்கலாந் தன்மையமைந்ததன்று, பாங்கு அலார் பணிய - நட்பற்ற பகைவர்களும் தன்னைப் பணிந்து தன்வழியொழுக, சூழும் நூலவர் பாகமாக - தன்னைச் சூழ்ந்துள்ள அறநூல்களை யுணர்ந்தவர்களான அமைச்சர்கள் பக்கத் துணையாக, பூங்குலாம் அலங்கன் மாலைப்புரவலன் - மலர்களமைந்து விளங்கும் அசைகின்ற மாலையை அணிந்த அரசனானவன், பொறுக்கும் - தான் அரசாட்சிச் சுமையைத் தாங்குவான் (எ - று.) அன்றே : அசை. அரசியற்சுமை அரசனாகிய ஒருவனால் மட்டும் சுமக்க வியலாத தொன்று. அமைச்சர்களும் துணையாக நின்று தாங்கியபொழுதே இனிது தாங்கப்படு மியல்யுடையது என்கிறான் அரசன். வீங்கு நீர் - மிகுதியாகிய நீர்; எனவே கடலுக்காயிற்று. நுகம் - நுகத்தடி, பாரம், நடுவு நிலைமை, வலிமை, கதவின் கணையமரம். |