(இ - ள்.) அற்றம் இன்று உலகம் காக்கும் - சோர்வின்றி உலகத்தைப் பாதுகாக்கும், அருந்தொழில் புரிந்து நின்றான் - அரிய அரசாட்சித் தொழிலை மேற்கொண்டு நின்ற மன்னனுக்கு, கற்றவர் - அவனுடைய அமைச்சர்கள் - மொழிந்தவாறு - ஆராய்ந்துணர்த்தியபடியே கழிப்பது - வினைகளைச் செய்து முற்றுவிப்பது ஒன்றே, கடனது ஆகும் - கடமையாகும். தெருண்டவர் - நூல்களைக் கற்றுத் தெளிந்த அமைச்சர்க்கு அவற்கு - அங்ஙனம் தம்வழிப்பட்டு நின்ற அரசனுக்கு, உறுதி நோக்கி - ஆக்கமானவற்றைக் குறிக்கொண்டு அவற்றைப் பெறுதற்குரிய வழிகளை வகுத்துக் காட்டலும், பழிவரு வழிகள் தூர - அவனுக்குப் பழியுண்டாதற்குரிய நெறிகளை அழித்து, மேலும்; செற்றவர்ச் செகுக்கும் சூழ்ச்சி - அவனுடைய பகைவர்களை அழிக்கும் உபாயங்களைக் கண்டுணர்த்தலும், கடவ - இன்னோரன்ன பற்பல கடமைகளும் உள்ளன. (எ - று.) மன்னன் கடமை அமைச்சர் சொற்படி நடத்தல் ஒன்றே; அமைச்சர்கட்கு அரசனுடைய ஆக்கங்கருதி ஆற்றவேண்டிய கடமைகள் பற்பல உள்ளன என்பதாம். “அரசுவாளின்மேல் வரும் மாதவம்“ என்பது பற்றி அருந் தொழில் என்றார். கற்றவர் என்றது ஈண்டமைச்சரை. கடனது என் புழி அது பகுதிப் பொருள் விகுதி. மற்று : வினைமாற்று. பழிவழிகள் தூர என்றதனால் நன்னெறிகளை வகுத்து என்க. செற்றவர் - பகைவர். தெருண்டவர் - ஈண்டமைச்சர். இஃது அரசன் அமைச்சர்க்குக் கூறிய முகமன். |