அரசனும் அமைச்சர்களும்

247. 1செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து சொன்னால்
அறிந்தவை யமர்ந்து செய்யு மமைதியா னரச னாவான்
செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்துகூறி
அறுந்தவை யியற்று கிற்கு மமைதியா ரமைச்ச ராவார்.
 

     (இ - ள்.) அரசன் ஆவான் - உலகத்தை நன்கு பாதுகாக்கக்கூடிய அரசனாவான்
யாவன், என்னின், செறிந்தவர் தெளிந்த நூலார் - நற்குணநற் செயல்கள்
செறிந்துள்ளவர்களும் அறநூல்களையுணர்ந்த வர்களுமாகிய அமைச்சர்கள், சிறந்தவை
தெரிந்து சொன்னால் - நன்மையான செயல்களை ஆராய்ந்து கூறினால், அறிந்து -
அவர்கள் கூறியதனை நன்குணர்ந்து, அவை அமர்ந்து செய்யும் அமைதியான் -
அவைகளை விரும்பிச் செய்யும் இயல்புடையவனாவான், அமைச்சர் ஆவார் - இனி அமைச்சர்களாகத் தக்கார் யாவரென்னின், செறிந்தவர் தெளிந்த நூலார் - நற்குண
நற்செயல்கள் செறிந்துள்ள வரும் பன்னூல்களையும் நன்குணர்ந் தவர்களும், சிறந்தவை -
நன்மை பயக்கக்கூடியவைகளை, தெரிந்து கூறி - ஆராய்ந்து அரசனுக்குச் சொல்லி;
அறிந்தவை - தாங்கள் நன்மை யென்றுணர்ந்தவைகளை, இயற்றுகிற்கும் - தவறாமற்
செய்விக்கும், அமைதியார் - தன்மையை யுடையவர்களாவர் (எ - று.)
இதனால் அரசர் இயல்பும் அமைச்சர் இயல்பும் இயம்பப்பட்டன.

( 9 )