(இ - ள்.) ஊழ்வரவு அன்னதேனும் - ஒருவகையான் நோக்குமிடத்துச் செயல் ஊழான் வரும் வரவினையுடையது எனினும், ஒருவகை - மற்றோர் வகையான் நோக்குமிடத்து, கருமம் எல்லாம் - செய்யுஞ் செயல்களெல்லாம், சூழ்பவர் சூழ்ந்து சூழுஞ் சூழ்ச்சியுள் தோன்றும் - அமைச்சர்கள் ஆராய்ந்துக் கூறும் உபாயத்துள்ளே தோன்றுவனவாகும். யாழ் பகர்ந்து இனிய தீஞ்செயல் அமிர்தனாரேனும் - யாழிசையைப் போன்று பேசும் மிகவினிய சொல்லையுடைய அமுதத்தைப் போன்ற மங்கையர்களாக விருப்பினும், சூழ்ச்சி வாழ்பவர் வல்லர் ஆயின் - சூழ்ச்சித்திறமையுடன் வாழ்வதில் வல்லவர்களாயின் அவர்கள், மன்னராய் மலர்ப - அரசர்களாகக்கூட விளங்குவார்கள், அன்றே - அல்லவோ (எ - று) அச்சமும் மடனும் மென்மையுமுடைய மகளிரும் அமைச்சர் துணையால் அரசராதல் கூடும் என அமைச்சர் மாண்பினை உயர்த் தோதுகின்றான். ஊழான் வருவன மாந்தர் அறிவுக்கு அப்பாற்படுதலின் அது கிடக்க என்பான் 'ஊழ்வரவு அன்னதேனும்' என்றான். சூழ்பவர் என்றது அமைச்சர் என்னும் பெயராய் நின்றது; சூழ்ச்சி வாழ்பவர் என்பதனையும் அமைச்சர் பெயராக்கினு மமையும். |