சூழ்ச்சியே அரசன் ஆற்றல்

250. ஆற்றன்மூன் றோதப்பட்ட வரசர்கட் கவற்றின் மிக்க
ஆற்றறான் சூழ்ச்சி யென்ப தாதலா லதனை யாயும்
ஆற்றலா ரமைச்ச ராக வமைச்சரோ டமர்ந்து செல்லும்
ஆற்றலா னரச னாகி னரியதொன் றில்லை யன்றே,
 

     (இ - ள்.) அரசர்கட்கு - உலகத்தையாளும் மன்னர்கட்கு, ஆற்றல் மூன்று -
நூல்களான் ஓதப்பட்ட ஆற்றல்கள் மூன்றாகும், அவற்றில்-பெருமை அறிவு முயற்சி
என்னும் அம்மூவகையாற்றலுள்ளும், மிக்க ஆற்றல்தான் சூழ்ச்சி என்ப - தலை சிறந்த
ஆற்றலாவது நடுவணின்ற அறிவாகிய சூழ்ச்சியே என்று சொல்வார்கள். ஆதலால் -
ஆகையால், அதனை ஆயும் ஆற்றலார் - அச் சூழ்ச்சியை ஆராய்ச்சி செய்யும்
அறிவுவலியுடையார், அமைச்சர்ஆக - தனக்கு உசாத்துணைவராக, அமைச்சரோடு -
அவ்வமைச்சர்களோடு, அமர்ந்து செல்லும் ஆற்றலான் அரசன் ஆகின் - பொருந்திச்
செயல்களைச் செய்து செல்லும் திறமையையுடையான் மன்னனாக இருப்பானாயின், அரியது
ஒன்று இல்லை - அம்மன்னனுக்கு அருமை யானது ஒன்றும் இவ்வுலகத்தில் இல்லை
(எ - று). அன்றே : அசை.

அமைச்சர்கள் சூழ்ச்சித் திறனில் வல்லவராக இருத்தல்வேண்டும். அரசன் அத்தகைய
அமைச்சர்களைப் பின்பற்றிச் செல்வானாயின், செய்து முடித்தற்கு அருமையான செயல்
யாதொன்றும் இல்லை.

ஆற்றல்கள் மூன்றாவன - பெருமை அறிவு முயற்சி என்பன. இவற்றை வடநூலார்
சத்தித்திரயம் என்ப (அவையாவன) பிரபாவசத்தி, உற்சாகசத்தி, மந்திரசத்தி என்பன.
இவற்றைத் திருக்குறளில் 891 ஆம் குறட்குப் பரிமேலழகர் கூறும் விளக்கவுரையினுங் காணலாம். இச்செய்யுளோடு,

“பால்வளை பரந்து மேயும் படுகடல் வளாக மெல்லாம்
கோல்வளை யாமற் காத்துன் குடைநிழற் றுஞ்ச நோக்கி
நூல்விளைந் தனைய நுண்சொற் புலவரோ டறத்தையோம்பின்
மேல்விளை யாத இன்பம் வேந்தமற் றில்லை கண்டாய்“
எனவரும் சீவக சிந்தாமணிச் செய்யுள் ஒப்பு நோக்கற் பாலது.

( 11 )