(இ - ள்.) வடம்திகழ் முலையினார்தம் காமத்தில் - முத்து மாலையை அணிந்த பெண்களுடைய சிற்றின்பத்தில், மதர்த்த மன்னர்க்கு - மயங்கி அழுந்திய அரசர்கட்கு, அடைந்தவர் மாண்பும் ஆங்கு ஒன்று இல்லையேல் - அமைச்சர்களாலுண்டாகும் சூழ்ச்சிப் பெருமையாகிய அவ்வொப்பற்ற ஆற்றல்தான் இல்லையாய்விடின், அரசர் வாழ்க்கை - அவ்வரசர்களுடைய அரசாட்சியானது, கல்விமாணாமடம் தவழ் ஒருவன் களித்த பின் - யானைப்பாகனுக்குரிய நூலினையுணராதவனும் பேதைமை பொருந்தியவனும் ஆகிய ஒருவன் கள்ளுண்டதற்பின், கடம் தவழ் கடாத்த வேழம் - மதநீர் ஒழுகப்பெறும் மதம்பொருந்திய யானையினை, மேல்கொண்டன்னது ஓர் வகையிற்றாம் - செலுத்துதற் பொருட்டு அதன் எருத்தத்தில் ஏறினாற்போல்வ தொருதன்மையினையுடைத்தாகும் (எ - று.) காமத்திலே தாழ்ந்த அரசன் ஆட்சி, யானை நூல் கல்லாதவனும் பேதையுமாகிய ஒருவன் கள்ளுண்ட பின்னர் மதங்கொண்ட யானையைச் செலுத்த அதன்மேல் ஏறினாற் போல்வதொரு தன்மையுடைத்தாம் என்றவாறு. எனவே அம்மன்னவன் றானுங்கெடும் உலகமும் கெடும் என்றவாறு. |