சூழ்ச்சி தவறினால் வீழ்ச்சிக் கிடமுண்டாம்

252. சுந்தரச் சுரும்புண் கண்ணிச் சூழ்கழ லரசர் வாழ்க்கை
தந்திர மறிந்து ஆழ்வான் ஆழ்ச்சிசார்ந் தமையல் வேண்டும்
மந்திரம் வழுவு மாயின் வாளெயிற் றரவு காய்த்து
தந்திரந் தப்பி னாற்போற் றன்னையே 1தபுக்கு மன்றே.
 

     (இ - ள்.) சுந்தரச் சுரும்பு உண் கண்ணி - அழகிய வண்டுகள் தேனையுண்ணும்
மாலையினையும், சூழ்கழல் - அடிகளிற் சூழக் கட்டப்பெறும் வீரக் கழலினையுமுடைய,
அரசர் வாழ்க்கை - அரசர்களுடைய அரசாட்சியானது, தந்திரம் அறிந்து - அறநூல்களை
யுணர்ந்து, சூழ்வான் சூழ்ச்சி சார்ந்து அமைதல் வேண்டும் - செயல்களைப் புரியும்
அமைச்சனுடைய சூழ்ச்சியைப் பற்றுக்கோடாகக் கொண்டு நிகழ்தல் வேண்டும், மந்திரம்
வழுவுமாயின் - அச்சூழ்ச்சித் துணைபிழைப்பின்; வான் எயிற்று அரவு - ஒளியுள்ள
பற்களையுடைய பாம்பினாலே, காய்ந்து - தீண்டப்பட்டான் ஒருவன், தந்திரம் தப்பினாற்
போல் - அந்நஞ்சு தீர்க்கும் உபாயத்திற் றப்பிவிட்டாற் போன்று, தன்னையே தபுக்கும் -
அவ்வரசாட்சியையே அழித்து விடுவதாகும் (எ - று.) அன்றே அசை.
அரவு தீண்டப்பட்டான் நஞ்சினை அகற்றும் உபாயத்திற் றவறின் அந்நஞ்சு அவனைக்
கொன்றொழித்தல் போன்று, பல்லாற்றானும் கேடு நேருதற்கிடமான அரசாட்சியை மேற்கொண்டவன் அக்கேட்டினை அகற்றும் அமைச்சரைத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்
அங்ஙனம் செய்யாவிடின் அத்தவறு அரசாட்சியையே அழித்துவிடும் என்பதாம். சுந்தரம் - அழகு. வாழ்க்கை ஈண்டு ஆட்சியின் மேனின்றது. மந்திரம் - சூழ்ச்சித்துணை.
காய்ந்து - காயப்பட்டு. தந்திரம் - உபாயம். தன்னையே - அரசாட்சியையே. தபுத்தல் -
அழித்தல்.

( 13 )