அமைச்சர் அறவுரை வழியாவர் அரசர்

253. எடுத்தன னிலங்குசாதி யெழிலொடு திகழு மேனு
மடுத்தன 1நிறத்ததாகு மணிகிளர் பளிங்கு போல
வடுத்தவ மலர்ந்து நுண்ணூன் மதியவர் வினையின் மாட்சி
கொடுத்தவா நிலைமை 2மன்னன் குணங்களாகக்
கொள்பவன்றே.
 

     (இ - ள்.) அடுத்தன நிறத்த ஆகும் - தன்னை அடுத்துள்ள பொருள்களின்
வன்னங்களையே தன்வன்னமாகக் காட்டாநின்ற; அணிகிளர் பளிங்குபோல - அழகுமிக்க
பளிங்குக் கல்லைப்போன்று, இலங்கு சாதி எழிலொடு எடுத்தனன் திகழுமேனும் - ஒரு
மன்னன்தான் விளக்கமுடைய மன்னர்குடிப் பிறந்தமைக்குரிய பேரழகினோடு,
ஏற்றமிக்கவனாய் விளங்கு வானாயினும், நிலைமை - அவன் அரசாட்சியில் பெற்றிருக்கின்ற
சிறப்பெல்லாம், வடுத்தவ மலர்ந்து - குற்றமில்லாமல் குணங்களாலே மிகுந்து, நுண் நூல்
மதியவர் - நுணுக்கமுடைய மெய்ந்நூல் அறிவோடே இயற்கையாய மதி நுட்பமுடைய
அமைச்சர்களினது, வினையின்மாட்சி - சூழ்ச்சியின் சிறப்புக்களால்; கொடுத்தவாம் -
கொடுக்கப்பட்டனவே ஆகும், மன்னன் குணங்களாகக் கொள்ப - இவ்வாறாதலை
அறியாதார் அச்சிறப்புக்களை, அம் மன்னனுக்கு இயற்கையிலமைந்த குணங்கள் என்றே
கருதிப் புகழ்வர் (எ - று.) அன்று, ஏ, அசைகள்.

“யான் எய்தியுள்ள எல்லாச் சிறப்பிற்கும் நல்லமைச்சர்களாகிய நீங்களே காரணமாவீர்கள்“ என்று சடிமன்னன் அமைச்சரைப் புகழ்கின்றான்.

“மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி யினத்தானாம்
இன்னன் எனப்படும் சொல்“ (திருக் - 453)

என்றார் வள்ளுவனாரும்.

( 14 )