உங்களால்தான் நான் சிறந்து விளங்குகிறேன் என்றல்

254.

மன்னுநீர் வளாக மெல்லாம் வணக்குதல் 1வல்லீ ராய
பன்னுநூற் புலவீர் முன்னர்ப் பலபகர்ந் துரைப்ப தென்னை
யென்னைநீ ரிறைவ னாக்கி யிராப்பக லியற்ற வன்றே
யின்னநீ ரின்ப வெள்ள மியைந்தியா 2னுயர்ந்த தென்றான்.
 

     (இ - ள்.) மன்னுநீர் வளாகம் எல்லாம் - நிலைபெற்ற நீர் சூழ்ந்த
உலகங்களையெல்லாம், வணங்குதல் வல்லீர் ஆய - வணங்கச் செய்வதில் ஆற்றல்
மிகுந்தவர்களாகிய, பன்னும் நூற் புலவீர் - புகழ்பொருந்திய அறநூல்களை யுணர்ந்த
அமைச்சர்காள் முன்னர் - உங்கட்கு முன்னே, பல பகர்ந்து உரைப்பது என்னை - நான்
பலவாறு கூறுவதால் யாது பயன்? என்னை நீர் இறைவன் ஆக்கி - என்னை நீங்கள்
அரசனாகச் செய்து, இராப்பகல் இயற்ற அன்றே - இரவுபகல் அரசாட்சியை நடத்துவதினால்
அல்லவோ, இன்னநீர் இன்பவெள்ளம் - இத்தன்மை பொருந்திய உயர்ந்த அரசாட்சியின்பப்
பெருக்கை, யான் இயைந்து உயர்ந்தது என்றான் - நான் அடைந்து சிறந்தேன் என்று
கூறினான் (எ - று.)

இரவும் பகலும் ஆகிய எப்பொழுதுமே என்னை நீயிர் போற்றி வருகின்றீர், யானோ
அவ்விரு பொழுதும் உங்கள் அருளால் இன்பமே எய்துவதல்லால் அரசியலால்
வருந்துன்பம் ஒரு சிறிதும் அறிந்திலேன் என்று புகழ்ந்தவாறு.

( 15 )