அரசன் சுயம்பிரபைக்கு மணமகன் யாவன்
என்று கேட்டல்

255. கொங்குடை வயிரக் குன்றின் கொழுஞ்சுடர் விளக்கிட்டாங்கு
நங்குடி விளங்க வந்த நங்கைதன் னலத்திற் கொத்தான்
தங்குடி விளங்க நின்ற தன்மையா னெவன்கொ லென்றான்
சங்குடைந் தனைய தாழைத் தடமலர்த் தொடைய லானே.
 

     (இ - ள்.) சங்கு உடைந்தனைய தாழைத் தடமலர்த் தொடையலான் - சங்கு
உடைபட்டாற்போல் மலருகின்ற தாழையின் பெரிய பூவாற் கட்டப்பெற்ற மாலையையுடைய
சுவலனசடியரசன், கொங்குடை வயிரக்குன்றின் - தேனிறாலை யுடைய வயிரமணியாலியன்ற
மலையின்மீது, கொழுஞ்சுடர் விளக்கிட்டாங்கு - மிகுந்த ஒளியையுடைய விளக்கை யேற்றி
வைத்தாற்போல, நங்குடி விளங்கவந்த - நமது வழிமுறையானது விளங்குமாறு பிறந்துள்ள, நங்கைதன் நலத்திற்கு ஒத்தான் - சுயம்பிரபையினுடைய அழகிற்குத் தகுந்தவனாக, தங்குடி
விளங்கநின்ற தன்மையான் - தனது குடியானது சிறப்படையுமாறு பிறந்திருக்கும்
பெருமையை யுடையவன், எவன்கொல் என்றான் - யாவனோ என்று கேட்டான். (எ - று.)

சுயம்பிரபை மிகுந்த சிறப்புடையாள் என்பதை அரசன் முன்னீரண்டடி களால்
பெறவைத்தான். கொங்கு-தேன்; ஈண்டு தேனிறாலுக்கு ஆகுபெயர். தனது குடியை விளக்கப்
பிறந்தவள் என்பான் குன்றின் கொழுஞ்சுடர் விளக்கிட்டாங்கு என்று உவமை
எடுத்தோதினான். குலப்பெருமை குறிப்பான் வயிரக்குன்றின் உவமை கூறினான்.

( 16 )