(இ - ள்.) இறையிவை மொழியக் கேட்டே - அரசனானவன் மேற்கூறியவாறு சொல்லியதைக் கேட்டு; இருந்தவர் - அமைச்சர்கள், இறைஞ்சி ஏத்தி - அரசனைத் தொழுது போற்றி, அறைகழல் அரவத்தானை - ஒலிக்கின்ற வீரக்கழலைக் கட்டிய போர் மறவர்களைக்கொண்ட பேரொலி பொருந்திய படையையும், அணிமுடி - அழகிய முடியையும் உடைய, அரசர் ஏறே - அரசர்கட்குச் சிங்கவேறு போன்றவனே! நிறைபுகழ் உலகம் காத்து - நிறைந்த புகழையுடைய இவ்வுலகத்தைப் பாதுகாத்து; நின் இறைமை நிலாக என்று - உன்னுடைய அரசுரிமையானது நீடுழி வாழ்வதாக என்று வாழ்த்துரை கூறி, முறை முறை மொழியலுற்று - வரன்முறையாகப் பதிலுரைத்தற்கு, முன்னிய முகத்தர் ஆனார் - முற்பட்ட முகமடையவர்களானார்கள் (எ - று.) நிலாக - நிலாவுக என்பதன் தொகுத்தல் என்பர், அமைச்சர்கள் அரசனை வாழ்த்திப் பதிலுரைக்கத் தொடங்கினார்கள் என்க. அரசர்கட்கு அமைச்சர்களும் பெரியோர்களும் பதிலுரைக்கத் தொடங்கும் போதும் ஒரு செய்தியைக் கூறத் தொடங்கும்போதும் வாழ்த்துதல் மரபு. |