(இ - ள்.) பணிந்து - அரசனை வணங்கி, ஏனையார் - மற்றவர்கள், பாங்கு இருப்ப - பக்கத்திலேயிருக்க, இணைந்து நின்று உலவும் தும்பி - ஆணும் பெண்ணுமாய்த் தம்முட் புணர்ந்திருந்தும் உலவியும் வருகின்ற வண்டுகளாலே, இடை இடை இருண்டு தோன்ற - நடுவே நடுவே இருண்டு தோன்றா நிற்ப, அணிந்து நின்று அவரும் பைந்தார் - அழகுசெய்து மலர்கின்ற புதிய மாலையினையும், அணிமணி முடியினாற்கு - அழகிய மணிகள் பதித்துச் செய்யப்பெற்ற முடியையுமுடைய அரசனுக்கு, சுச்சுதன் - சுச்சுதன் என்னும் பெயரினையுடைய அமைச்சனானவன், நூல் பலவு நோக்கித் துணிந்து - பல நூன் முறைகளையும் எண்ணிப் பார்த்து முடிவு செய்து, தன்புலமை தோன்றச் சொல்லலுற்றான் - தன் அறிவுடைமையானது வெளிப்படுமாறு கூறலானான். (எ - று.) சூழ்ச்சி மன்றத்தின்கண் ஒவ்வோர் அமைச்சரும் தத்தம் கருத்தினைக் கூறவேண்டியது கடமையதாலின் இப்பொழுது சுச்சுதன் தன் கருத்தைச் கூறுகிறான். |