இதுவும் அடுத்த செய்யுளும் ஒருதொடர் (இ - ள்.) அழல்கதிர் இலங்கும் செவ்வேல் - தீயைப் போன்று ஒளிவிடுஞ் சிவந்த வேலினையும், அதிர்கழல் - ஒலிக்கின்ற வீரக்கழலினையுமுடைய, அரசர்கோவே - அரசர்களுக்குத் தலைவனே! பொழில்கதிர் பரப்பிவந்து - பெருமையையுடைய ஒளியை யாண்டும் விரித்துக்கொண்டு வந்து, பொங்கு இருள்புதைய நூறும் - மிகுந்த இருள் அழியுமாறு கெடுக்கும், தொழில் கதிர்க் கடவுள்தோன்ற - தொழிலையுடைய ஞாயிறு எழா நிற்ப, சூரியகாந்தம் என்னும் எழில்கதிர்ப் பிறங்கல் வட்டம் - சூரியகாந்தமென்று பெயர் சொல்லப்பெறுகிற அழகிய ஒளியமைந்த கற்பாறை. எரி உமிழ்ந்திடுவது - தீயை வெளிப்படுத்துவதாகும் (எ - று.) அன்றே: அசை. பொழில் - பெருமை. நூறுதல் - ஈண்டு அழித்தல் மேனின்றது. பரப்பி வந்து நூறும் தொழிலையுடைய கதிர்க் கடவுள் என்க. கதிர்க் கடவுளுக்கு ஒளி பரப்பி இருளைக் கெடுத்தல் இயல்பானாற் போன்று நினக்கும் உலகை ஓம்பிப் பகைகெடுத்தல் இயற்கைப் பண்பென்பான் இங்ஙனம் உவமையை விசேடித்துக் கூறினான். கதிர்க்கடவுள் அரசனுக்கும், சூரியகாந்தக்கல் அமைச்சர்கட்கும் உவமைகள். (19) |