முல்லை | 26. | தார்செய் கொன்றை தளித்ததண் டேறலுண் டேர்செய் கின்ற விளம்பு லிருங்குழைக் கார்செய் காலை கறித்தொறு மெல்லவே போர்செய் 1மாவினம் பூத்தண்பு றணியே. | (இ - ள்.) பூ தண் புறணி - அழகிய குளிர்ந்த முல்லை நிலங்களில்; தார் செய்கொன்றை தளித்த தண்தேறல் உண்டு-மாலைபோல் மலரும் கொன்றையிடத்தே துளித்த குளிர்ந்த தேனையுண்டு; ஏர்செய்கின்ற இளம்புல்-அழகு செய்கின்ற இளமையான பசும் புற்களையும்; இரும்குழை-சிறந்த தழைகளையும்; கார்செய் காலை-கார்காலத்திலே; கறித்தொறும்-மேயுந்தோறும்; ஆஇனம்-பசுத்திரள்; மெல்லவே போர் செய்ம்-ஒன்றோடொன்று விளையாட்டாகப் போர் செய்யும். (எ - று.) கொன்றைமலர் நீண்ட கொத்தாக மாலைபோல் மலருந்தன்மையுடையது ஆதலின் தார்செய் கொன்றை என்றார். கார்செய் காலை; காரை (மழை) உண்டாகச் செய்யும் கார்காலம். “காரு மாலையுமுல்லை“ என்பது தொல்காப்பியம், இதனால் முல்லை நிலத்திற்குரிய கார்காலம் கூறினார். செய்ம்-செய்யும் என்னும் முற்றின் ஈற்றுயிர் மெய்கெட்டது. மெல்லவே போர் செய்யும் என்பதனால் போர் விளையாட்டுப் போர் என்பது பெறப்பட்டது. மாவினம்-விலங்கினம் எனவும் கூறலாம். | ( 26 ) | |
|
|