பொறுமையின் பெருமை

262.

கண்ணிய கடாத்த வேழங் கவுளினா னுரிஞப் பட்டுத்
தண்ணிய தன்மை நீங்காச் சந்தனச் சாதி போலப்
புண்ணியக் கிழவர் கீழோர் பிழைத்தன பொறுப்ப வாயின்
மண்ணியல் வளாக மெல்லாம் வழிநின்று வணங்கு மன்றே.
 

     (இ - ள்.) கண்ணிய கடாத்த வேழம் - பெருமையையுடைய மதம்பொருந்திய
யானையினது, கவுளினால் உரிஞப் பட்டும் - கன்னத்தினால் உராய்ந்து தேய்க்கப்பட்டும்,
தண்ணிய தன்மை நீங்கா - இனிய குணமானது கெடாத, சந்தனச் சாதிபோல - சந்தன
மரங்களைப் போல, புண்ணியக்கிழவர் - நல் வினைக்குரியவர்களாகிய அரசர்கள், கீழோர்
பிழைத்தன பொறுப்ப ஆயின் - அமைச்சர் முதலிய கீழானவர்கள் செய்த பிழைகளைப்
பொறுப்பார்களாயின், மண்இயல் வளாகம் எல்லாம் - மண்திணிந்தமைந்த உலகங்களிலுள்ள
உயிர்த்தொகைகளெல்லாம் வழிநின்று வணங்கும் - அவ்வரசன் வழிப்பட்டு நின்று
அவனைப் பணியும், (எ - று.) அன்றே; அசை.

சந்தனமரங்கள் தேய்ப்புண்ட விடத்தும் சிறந்த மணத்தை வெளிப்படுத்தும். அதனால்
சந்தனத்தின் பெருமை வெளியாம். அதனைப் போல் அரசர்கள் சிறியோர்களுடைய
பிழைகளை, அஃதாவது இகழ்தல் முதலியவைகளைப் பொறுப்பார்களாயின்
உலகத்துயிர்களெல்லாம் அவர்கள் வழிப்பட்டு நிற்கும் என்க.

( 23 )