(இ - ள்.) நெடுங்கடல் - நீண்ட பெரிய கடலானது, நிறம் - தன்னுடைய இயல்பானது, தலைமயங்க - மாறுபாட்டையடைய, வெம்பி - கொதித்து, சுடுவதாயின் - வருத்துவதானால், இறந்து அலை மயங்கு நீர் வாழ் உயிர்க்கு - மிகுதியாக அலைகள்பொருந்திய கடலிலே வாழுகின்ற மீன்முதலிய நீர்வாழ் உயிர்களின், இடர்-துன்பத்திற்கு, எல்லைஉண்டோ - ஓர் அளவு உண்டாகுமோ? மறம் - வலிமையானது, தலைமயங்கு - மிகுதியாக அமைந்துள்ள, செவ்வேல் மன்னவன் வெய்யன் ஆயின் செம்மையான வேற்படையை ஏந்திய அரசனானவன் கொடியவனானால், அறம் - நன்னிலையானது; தலைமயங்கி - சுழற்சியையடைந்து, வையம் - உலகத்துயிர்கள், அரும்படர் உழக்கும் - பொறுத்தற்கரிய துன்பத்தை யடையும் (எ - று.) அன்றே : அசை. கடல் வெதும்பியவிடத்து அதனில் வாழ் உயிர்த் தொகைகள் யாவும் துன்பத்தை யடைதலைப்போல், அரசன் தீயவனாயின் உலகத்துயிர்கள் யாவும் கொடிய துன்பத்தையடையும் என்க. |