அறவழி நிற்கும் அரசன் அடிநிழலே அருந்துணை

266. மறந்தலை மயங்கி வையத் தொருவரை யொருவர் வாட்ட
விறந்தலை யுறாமை நோக்கி யின்னுயிர் போலக் காக்கும்
அறந்தலை நின்ற வேந்த ரடிநிழ லன்றி யார்க்கும்
சிறந்ததொன் றில்லை கண்டாய் திருமணி திகழும் பூணோய்.
 

     (இ - ள்.) திருமணி திகழும் பூணோய் - அழகிய மணிகள் விளங்கும்
அணிகலன்களை யணிந்தவனே! மறம் தலைமயங்கி - தீவினையையே மேற்கொண்டு,
வையத்து - இவ்வுலகத்தின்கண், ஒருவரை ஒருவர் வாட்ட - ஒருவரை மற்றொருவர்
வருத்துதல் செய்ய இவ்வாற்றால், இறந்து - உயிர்கள் மிகுதியாக, அலையுறாமை நோக்கி -
துன்பமுறாதபடி பார்த்து, இன்னுயிர் போலக் காக்கும் - அவற்றை இனிய தன்னுடைய
உயிரைப் போலப் பாதுகாக்கும், அறம் தலைநின்ற - அறவழிக் கண்ணே சிறந்து
விளங்குகின்ற, வேந்தர் அடிநிழல் அன்றி - அரசர்களுடைய அடி நிழலையல்லாமல்,
யார்க்கும் - எத்தகையோர்க்கும், சிறந்தது ஒன்று இல்லை கண்டாய் - சிறப்பானது
மற்றொன்றுமில்லை அதனை நீ உணர்ந்து கொள்வாயாக! (எ-று.)

உலகத்துயிர்கள் யாவுக்கும் அரசனுடைய செங்கோலை துணை என்க. “ஆங்கமை
வெய்தியக் கண்ணும் பயமின்றே, வேந்தமை வில்லாத நாடு“ என்றார் வள்ளுவனாரும்
(குறள் - 740)

( 27 )